வெய்யில் பருவம் தொடங்கிவிட்டால்
அம்மாவும் தன் தயாரிப்பு வரிசையை ஆரம்பித்துவிடுவாள்
மணிதக்காளி வற்றல் மோர் மிளகாய் மாகாளி ஊறுகாய் மாவடு கூழ் வற்றல் கறி வடகம் கத்திரி வற்றல் என பட்டியல் நீளும் .
என்னதான் அப்பா சலித்துக்கொண்டாலும் அவளின்
கைப்பக்குவத்தின் மீது அவருக்கு அலாதி பெருமை.
பக்குவமாய் நறுக்கிய மாங்காயில்
எண்ணெயும் காரமும் உப்புமிட்டு
பதமான பக்குவம் வரவும் சாடியில்
அடைத்து பத்திரப்படுத்திய அம்மா
தானும் ஊறுகாயாகிப்போனாள்.
ஆம். அவள் தன் உடலை தானமாக ஈந்திருந்தாள்.
அவளின் கைமணத்தில் தயாரான
பண்டங்கள் யாவும் வருடம் முழுதும்
எம் நாவில் ருசித்துக்கொண்டிருக்கும்.
பருவங்கள் திரும்பும் பண்டங்கள் தீரும் ஆனால்
அம்மாவும் அவள் கைமணமும் ?
No comments:
Post a Comment