சித்தரையின் ஓர் நாளில்
முத்திரை ஒன்றை நீ பதிக்க
நித்திரையின்றியே யென்
விழித்திரைகளிரண்டும்
செந்திரையாய் யாகியதை
எத்திரைக்கொண்டு நான் மறைக்க?
வைகாசி மாதத்திலுன்
கடுதாசி வந்ததினால்
மகராசியென் தாயுமென்
முகராசி கண்டே தன்
இளவரசி ஆவதெப்போ
மாதரசி் என்றேதான்
ஊராசி வேண்டி நின்றாள்..
ஆனி ஆடி கழிந்து
ஆவணியிலோர் திருநாளில்
தாவணியாள் என்னையுமே்
காதணிகலன்களோடு
நானிலமும் வாழ்த்திடவே
பூரணியாய் ஆக்கியதை
எண்ணியெண்ணி உவக்கின்றேன்
கண்ணிரண்டால்
நனைகின்றேன்.
No comments:
Post a Comment