Tuesday, 27 October 2015

மழையின் வகைகள்




இடி மின்னல் காற்றென
வாத்திய முழக்கங்களுடன் வான் கணவன்
புவிமகளின் கைத்தலம் பற்றும்
ஆரவார வைபவமோ
ஆர்ப்பரிக்கும் பெருமழையும்
விருப்பமிலா பந்தத்தில்
வரிந்துமே  திணிக்கப்பட்ட
பெண்ணவளின் மனநிலையோ
அமைதியான அடைமழையும்
காரசார மோதலினால்
பித்தம் தலைக்கேறி
வெப்பம் அடர்நதிருக்க
வல்லுறவாய் வந்ததுவோ
ஆலங்கட்டி மழையதுவும்
இனிதான இல்லறத்தில்
இயல்புடனே நடந்தேறும்
புரிதலுடன் கூடிய
கலவி செயல்பாடோ
காலத்தே வந்துதவும்
பருவமழை தானதுவும் .

Thursday, 15 October 2015

நிவேதிதா

வாசமுள்ள  புதுமலர் நீ
ரோசப்பூவின் நிறமும் நீ
பாசமுள்ள மகளும் நீ
மாசேயில்லா பொன்னும் நீ
நித்தம் உதித்திடும் கதிரும் நீ
வேள்வித்தீயின் தூய்மை நீ
தித்தித்திடும் செந்தே்னும் நீ
தாகம் தீர்த்திடும் நன்னீரும் நீ
என்னே தவம் நான் செய்தேனோ
கண்ணே உன்னை பெறுவதற்கே
விண்ணேதான் நான் புகுந்தாலும்
மண்ணே போற்றிட வாழ்த்துவனே!

 

சிரி......... லங்கா



சாதனையாய் அறிவித்தார்
வேதனை எமக்களித்த காடையரும்
போதனைகள் பெற்றார் - பன்னாட்டு
சேனையையும் துணை கொண்டார்
உலகதனை புறந்தள்ளி - வேறு
சிந்தனைகளேதுமின்றி - நம்
இனந்தனை அழிப்பதற்கே - பல
சோதனைகள் நடத்திட்டார் - மக்கள்
வாழ்வதனை குலைத்திட்டார் - அவர்
அழிவதனை நான் காண தலைவரின்
வரவதனை எதிர்நோக்கி
காலந்தனை கடத்திடுவேன்
நெஞ்சந்தனை அமைதியாக்கி
வஞ்சந்தனை உள்மூடி ....

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்




காலையில ஈன்ற பசு
கன்னுக்குட்டி செத்ததால
கதறியேதான் அழுவுதுங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க!

வாரக்கூலி வாங்கியேதான்
மாமனவன் வந்திடுவான்
பள்ளிகூட பீசயும்தான்
கட்டிகலாம் நாளைக்குன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வாங்கிவந்த கூலியெல்லாம்
போனதது டாஸ்மாகிலன்னு
தெரிஞ்சு அவ அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
கட்டாயம்  கனியு்முன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வந்த இந்த சம்பந்தமும்
கைநழுவி போனதால
தலையணையில் புதைஞ்சு அவ
தனக்குள்ள அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
அம்சமாதான் விளைஞ்சிருக்கு
அறுத்துக்கலாம் அடுத்தவாரம்
என்றிருந்த உழவனுக்கு
புயல் மழையா வந்து அவன்
உழைப்பு மொத்தம் போனதால
அடிச்சுகிட்டு அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
எத்தனையோ அழுகும் குரல்
ஈனமாதான் கேக்குதுங்க பகலினிலே.
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க

சிட்டுக்குருவி



சின்ன சின்ன குருவி நான்
சின்ன சிட்டு குருவி நான்
சிறகை விரித்து இரையை தேடி
சிக்கெனப் பறந்துதான்
சிறிய பெரிய புழுவையும்
சிந்திய நெல் மணியையும்
சிறுக சிறுகக் கொத்தியே
 சிறந்த வாழ்க்கை வாழ்ந்திட்டேன்
சின்ன எந்தன் கூட்டிலே
சில்லென என் இணையுடன்
சிரித்து மகிழ்ந்து சில காலம் சிறுமை ஏதும் இன்றியே
சித்தம் குளிர்ந்து மகிழ்ந்திட்டேன்
சிரித்து பேசி மகிழ உம்
சிந்தை கவர்ந்த செல்லினால்
சிக்கலாய்தான் ஆனதே
சின்ன எந்தன் வாழ்வுமே
சிக்கி தவிக்கும் என்னையும்
சிநேகமுடனே காத்திட
சிரம் தாழ்த்தி வேண்டினேன் சிணுங்காமல் என்னை காப்பீரே

பெருஞ்சோகம்


நந்திக்கடலருகே நடந்திட்ட பெருஞ்சோகம்
கத்திக்கத்தி நானழுதும் கரைந்திட்டில்லையென் துயரம்
புத்திகெட்ட காடையனே புதைந்திடவில்லையென் சமூகம்
முந்தியேதான் பெற்றிடுவாய் - நீயே விதைத்திட்ட உன் முடிவை
பொத்தி பொத்தி எம் பெண்டிர்
காத்திட்ட கற்பதனை
பந்தியிலே வைத்தேதான்
சுமந்திட்டாய்  பாவந்தனை
சுத்தி சுத்தியே நீ வந்தாலும்
கரைந்திடாதடா உன் ஊழ்வினையும்
தத்தி தத்தி நடை பயிலும்
தளிர்களாம் எம்மக்கள்
சிந்திய தம் முன்னோரின்
குருதியிலே மறம் வளர்த்து
குத்தியுனை கொன்றிடுவார்
கொத்திடுமே கழுகினமும் வல்லூரும் !

பள்ளி


அரிச்சுவடி முதல்
ஆன்றோர் பெருமைவரை
இலக்கியமும் இதிகாசமுமே
ஈங்கனே யாம் கற்றோம்.
உளமார்ந்த நட்பினையும்
ஊரார் போற்றிடும் பண்பையுமே
எண் எழுத்து பாட்டுடனே
ஏற்புடனே கற்றறிந்தோம்.
ஐயங்கள் ஏதுமின்றி - நாட்டினது ஒருமைப்பாட்டினையும் ஒன்றியுமே
ஒவாமுயற்ச்சியுடன் இவ்விடமே கற்றுணர்ந்தோம்.
 ஔவியமும் தவறு என்றறிந்தோம் 
அஃதனைத்தும்  கற்பித்தது எம்பள்ளி.