Tuesday 27 October 2015

மழையின் வகைகள்




இடி மின்னல் காற்றென
வாத்திய முழக்கங்களுடன் வான் கணவன்
புவிமகளின் கைத்தலம் பற்றும்
ஆரவார வைபவமோ
ஆர்ப்பரிக்கும் பெருமழையும்
விருப்பமிலா பந்தத்தில்
வரிந்துமே  திணிக்கப்பட்ட
பெண்ணவளின் மனநிலையோ
அமைதியான அடைமழையும்
காரசார மோதலினால்
பித்தம் தலைக்கேறி
வெப்பம் அடர்நதிருக்க
வல்லுறவாய் வந்ததுவோ
ஆலங்கட்டி மழையதுவும்
இனிதான இல்லறத்தில்
இயல்புடனே நடந்தேறும்
புரிதலுடன் கூடிய
கலவி செயல்பாடோ
காலத்தே வந்துதவும்
பருவமழை தானதுவும் .

Thursday 15 October 2015

நிவேதிதா

வாசமுள்ள  புதுமலர் நீ
ரோசப்பூவின் நிறமும் நீ
பாசமுள்ள மகளும் நீ
மாசேயில்லா பொன்னும் நீ
நித்தம் உதித்திடும் கதிரும் நீ
வேள்வித்தீயின் தூய்மை நீ
தித்தித்திடும் செந்தே்னும் நீ
தாகம் தீர்த்திடும் நன்னீரும் நீ
என்னே தவம் நான் செய்தேனோ
கண்ணே உன்னை பெறுவதற்கே
விண்ணேதான் நான் புகுந்தாலும்
மண்ணே போற்றிட வாழ்த்துவனே!

 

சிரி......... லங்கா



சாதனையாய் அறிவித்தார்
வேதனை எமக்களித்த காடையரும்
போதனைகள் பெற்றார் - பன்னாட்டு
சேனையையும் துணை கொண்டார்
உலகதனை புறந்தள்ளி - வேறு
சிந்தனைகளேதுமின்றி - நம்
இனந்தனை அழிப்பதற்கே - பல
சோதனைகள் நடத்திட்டார் - மக்கள்
வாழ்வதனை குலைத்திட்டார் - அவர்
அழிவதனை நான் காண தலைவரின்
வரவதனை எதிர்நோக்கி
காலந்தனை கடத்திடுவேன்
நெஞ்சந்தனை அமைதியாக்கி
வஞ்சந்தனை உள்மூடி ....

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்




காலையில ஈன்ற பசு
கன்னுக்குட்டி செத்ததால
கதறியேதான் அழுவுதுங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க!

வாரக்கூலி வாங்கியேதான்
மாமனவன் வந்திடுவான்
பள்ளிகூட பீசயும்தான்
கட்டிகலாம் நாளைக்குன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வாங்கிவந்த கூலியெல்லாம்
போனதது டாஸ்மாகிலன்னு
தெரிஞ்சு அவ அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
கட்டாயம்  கனியு்முன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வந்த இந்த சம்பந்தமும்
கைநழுவி போனதால
தலையணையில் புதைஞ்சு அவ
தனக்குள்ள அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
அம்சமாதான் விளைஞ்சிருக்கு
அறுத்துக்கலாம் அடுத்தவாரம்
என்றிருந்த உழவனுக்கு
புயல் மழையா வந்து அவன்
உழைப்பு மொத்தம் போனதால
அடிச்சுகிட்டு அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
எத்தனையோ அழுகும் குரல்
ஈனமாதான் கேக்குதுங்க பகலினிலே.
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க

சிட்டுக்குருவி



சின்ன சின்ன குருவி நான்
சின்ன சிட்டு குருவி நான்
சிறகை விரித்து இரையை தேடி
சிக்கெனப் பறந்துதான்
சிறிய பெரிய புழுவையும்
சிந்திய நெல் மணியையும்
சிறுக சிறுகக் கொத்தியே
 சிறந்த வாழ்க்கை வாழ்ந்திட்டேன்
சின்ன எந்தன் கூட்டிலே
சில்லென என் இணையுடன்
சிரித்து மகிழ்ந்து சில காலம் சிறுமை ஏதும் இன்றியே
சித்தம் குளிர்ந்து மகிழ்ந்திட்டேன்
சிரித்து பேசி மகிழ உம்
சிந்தை கவர்ந்த செல்லினால்
சிக்கலாய்தான் ஆனதே
சின்ன எந்தன் வாழ்வுமே
சிக்கி தவிக்கும் என்னையும்
சிநேகமுடனே காத்திட
சிரம் தாழ்த்தி வேண்டினேன் சிணுங்காமல் என்னை காப்பீரே

பெருஞ்சோகம்


நந்திக்கடலருகே நடந்திட்ட பெருஞ்சோகம்
கத்திக்கத்தி நானழுதும் கரைந்திட்டில்லையென் துயரம்
புத்திகெட்ட காடையனே புதைந்திடவில்லையென் சமூகம்
முந்தியேதான் பெற்றிடுவாய் - நீயே விதைத்திட்ட உன் முடிவை
பொத்தி பொத்தி எம் பெண்டிர்
காத்திட்ட கற்பதனை
பந்தியிலே வைத்தேதான்
சுமந்திட்டாய்  பாவந்தனை
சுத்தி சுத்தியே நீ வந்தாலும்
கரைந்திடாதடா உன் ஊழ்வினையும்
தத்தி தத்தி நடை பயிலும்
தளிர்களாம் எம்மக்கள்
சிந்திய தம் முன்னோரின்
குருதியிலே மறம் வளர்த்து
குத்தியுனை கொன்றிடுவார்
கொத்திடுமே கழுகினமும் வல்லூரும் !

பள்ளி


அரிச்சுவடி முதல்
ஆன்றோர் பெருமைவரை
இலக்கியமும் இதிகாசமுமே
ஈங்கனே யாம் கற்றோம்.
உளமார்ந்த நட்பினையும்
ஊரார் போற்றிடும் பண்பையுமே
எண் எழுத்து பாட்டுடனே
ஏற்புடனே கற்றறிந்தோம்.
ஐயங்கள் ஏதுமின்றி - நாட்டினது ஒருமைப்பாட்டினையும் ஒன்றியுமே
ஒவாமுயற்ச்சியுடன் இவ்விடமே கற்றுணர்ந்தோம்.
 ஔவியமும் தவறு என்றறிந்தோம் 
அஃதனைத்தும்  கற்பித்தது எம்பள்ளி.

நினைவலைகள்




சித்தரையின் ஓர் நாளில்
முத்திரை ஒன்றை நீ பதிக்க
நித்திரையின்றியே யென்
விழித்திரைகளிரண்டும்
செந்திரையாய் யாகியதை
எத்திரைக்கொண்டு நான் மறைக்க?
 வைகாசி மாதத்திலுன்
கடுதாசி வந்ததினால்
மகராசியென் தாயுமென்
முகராசி கண்டே தன்
இளவரசி ஆவதெப்போ
மாதரசி் என்றேதான்
ஊராசி வேண்டி நின்றாள்..
ஆனி ஆடி கழிந்து
ஆவணியிலோர் திருநாளில்
தாவணியாள் என்னையுமே்
காதணிகலன்களோடு
நானிலமும் வாழ்த்திடவே
பூரணியாய் ஆக்கியதை
எண்ணியெண்ணி உவக்கின்றேன்
கண்ணிரண்டால்
 நனைகின்றேன்.

சாரா எல் கே ஜி

  
திரையின்  பக்கவாட்டிலிருந்தவாரே
நடன அசைவுகளை
ஞாபகபடுத்திகொண்டிருந்த
ஆசிரியையை
கண்ணுற்றபடி
மேடையில் கலக்கிக்கொண்டிருந்தாள்
சாரா குட்டி. எல்.கே.ஜி.
பசி மயக்கத்தினாலோ
மசக்கையின் பொருட்டோ
துவண்டு சரிந்த ஆசிரியையை
கவனித்த சாரா
மேடையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள்!
மிஸ் இந்த ஸ்டெப் சொல்லித் தரவேயில்ல  என்றவாறே!

Thursday 8 October 2015

செந்தமிழா




செம்மை  வாழ்வை எண்ணி
செம்மரம் சாய்த்தனயோ?
செந் நீரை சிந்தியே நீ
செந்தமிழா மாண்டனையே !
செருக்குற்றோர் உனை கொன்றார்..
செங்கோட்டை கேட்டிடுமோ?
சென்னை கோட்டையுந்தான்  கேட்டிடுமோ?
செங்கோலும் இங்கு இல்லை
செயல் புரிவார் யாரும் இல்லை!
செம்மொழியாள் தமிழ் தாயின் 
செம்மாந்த நிலை மாறி
செல்கின்ற இடமெங்கும்
செங்களமாய் ஆவது ஏன்?
செந்தழலாய் எரியுதடா
செத்த உன் சேதி கேட்டு!
செல்லாமை வாட்டியதே!
செல்லிடமும் கொல்கிறதே!
   
(செல்லாமை - வறுமை )
 



மழை


ஆறு குளம் ஏரி நிரப்பி
காடு வயல் தோட்டம் காத்து
ஊரெல்லாம் செழிப்பாக்கி
மனமெல்லாம் நிறைவாக்கி
மகிழ்வினை நீ தந்திடிலோ
கூத்திடுவோம் வான்மழையே !
மாறாக பேயாட்டம் நீயாடி
ஓலமிட்டு நீயழுது நாசமதை தந்திடிலோ
நீயும் இயற்கையின் ஓர் பிழையே !

கூடிழந்த சிட்டுக்குருவிகள்

ஓலக்குடிசையில உங்க வாழ்க்கை. அதன் விட்டத்துல ஒதுங்கியேதான் எங்க.வாழ்க்கை
 நெல்லு.கம்பு சோளமுன்னு  நெலத்துல விதைச்சிங்க சிந்துனத தின்னுதான் சிறப்பா திரிஞ்சொங்க.
தெருவோரமெல்லாம் மரத்த வளர்த்திங்க
அதுல ஓடி விளையாடி பூரிசோம்க
மரத்தடியில உங்க காதல் வாழ்க்கை
மரத்துமேலதான் நாங்களும் காதலிச்சோங்க.
இப்படி ஒன்னுமண்ணா திரிஞ்ச நமக்குள்ள,
இன்னிக்கு ஏகப்பட்ட இடைவெளிங்க
ஆறறிவு படைச்ச நீங்க செஞ்சுட்டிங்க
புரட்ச்சியெல்லாம் கண்டுட்டிங்க வளர்சசியதான்.
 ஆனா அஞ்சறிவு எங்களுக்கு எதுவும் புரியலிங்க.
காசு பணம் பங்களான்னு மாறிடுச்சு உங்க வாழ்க்கை.
காடு மேடு கழனியின்னு நாங்க பாட்டு சுத்துனோங்க!
கோபுரமா கட்டிட்டிங்க அலைபேசியதில் அளவளாவ!
காந்த சக்தியத தாங்க முடியலிங்க எங்களால!
மரத்தையெல்லாம் வெட்டிட்டிங்க
தானிய மூட்டையெல்லாம் நெகிழிப்பை ஆக்கிட்டிங்க.
விவசாய நெலமெல்லாம் வீட்டுமனைகளாக்கிட்டிங்க
இயற்கையோட படைப்பு முழுசும் உங்களுக்கு மட்டுமாங்க?
உங்களோட சுகதுக்கத்தையெல்லாம்
எங்ககிட்ட சொன்னீங்க.
பாட்டெல்லாம் படிச்சிங்க.
ஆனா, இன்னிக்கி அரையடிக்கு ஒரு பெட்டியும் கைப்பிடி தானியமும் வேண்டுறோங்க உங்ககிட்ட
செவிமடுத்து கேளுங்க! எங்க குறைய
தீர்த்திடுங்க !
உங்களை வாழ்த்துறோங்க !