Wednesday, 27 January 2016
பரவசம்
***********************
என்னவனை காணாது
அம்புலி அற்ற கங்குலாய்
இருந்த என் நெஞ்சம்
அவன் வரவில்
பகலவனை கண்ட குவலயமாய் 
மலர்கிறதே என் பாங்கியே !

Wednesday, 6 January 2016

விருப்பமுடன் என் வணக்கம்


  சிந்திக்க சொன்ன உன்னை
  நிந்திக்க துணிந்தனரே !
 போதிக்க பலர் இருந்தும் 
சாதிக்க வழிகள் சொன்னாய் !
 சாதிக்கு பாடைக்கட்டி
 நீதிக்கு கட்சி கண்டாய் ! பெஞ்சாதிக்கு உரிமை தந்து 
பெண் சாதிக்கே   உயர்வு தந்தாய் ! கடவுளரை மறு த்திடென்றாய்     மனிதநேயம் உணர்ந்திடென்றாய் 
மது போதை தவிர்த்திடென்றாய்  தமிழகமோ தமிழருக்கே என்றாய் ! பகுத்தறிவு பகலவனே !
அறிவுலக ஆசானே !
என்றுணர்வார் மாந்தர் இவர் 
நின் கருத்தின் உண்மைதனை !
பார் போற்றும் பண்பாளா !
ஏற்றிடுக என் வணக்கம். 

Thursday, 10 December 2015

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?
---------------------------------------------------------
செம்பரம்பாக்கமென்னும் ஏரித்தாய்
பிரசவித்த செல்வமகள் :
அடையாறேன பெயர் கொண்டு
புக்ககம் சேர்ந்திடவே
தொடங்கினள் நற்பயணம்.
உல்லாசமாய் புறப்பட்ட
பெண்ணவளும் வழியதனில்
எதிர்கொண்டாள் பெரும் துன்பம் .
மாசற்ற அவள் வடிவம் 
வாஞ்சையான அவள் வருடல்
வாளிப்பான அவள் தேகம்:
பொறுப்பரோ கயவருமே ?
அவள் பாதையதை சிதைத்தாரே ;
பயணத்தை தடுத்தாரே:
பேதையவள் என் செய்வாள் ?
பொலிவெல்லாம் நலிவுற்று
புக்ககம் வந்தடைந்தாளே !
வண்ணமகள் திருக்கோலம்
கண்டே்தான் கொண்டவனும்
அடைந்திட்டான் பெருங்கோபம் ..
கோபமது உறுமாறி
 வஞ்சமென ஆனதுவே.
புக்ககத்தார் ஆசியுடன் 
கொண்டவனின் துணைகொண்டு
கூரையேறி சண்டையிட
புறப்பட் டாள் மங்கையவள்.
பொங்கி எழுந்த அவளெதிரே
யாரும் தப்பிட கூடிடுமோ?
ஆசிபெற்றாள் தாயிடமே
மீட்டெடுத்தாள் தன் வழியை
நீக்கினளே மாசனைத்தும்
பெற்றனளே அழகு திருக்கோலம் !
மடையரே உணர்வீரோ - இனியேனும்
நடப்பீரோ மாண்புடனே !
 

Tuesday, 27 October 2015

மழையின் வகைகள்
இடி மின்னல் காற்றென
வாத்திய முழக்கங்களுடன் வான் கணவன்
புவிமகளின் கைத்தலம் பற்றும்
ஆரவார வைபவமோ
ஆர்ப்பரிக்கும் பெருமழையும்
விருப்பமிலா பந்தத்தில்
வரிந்துமே  திணிக்கப்பட்ட
பெண்ணவளின் மனநிலையோ
அமைதியான அடைமழையும்
காரசார மோதலினால்
பித்தம் தலைக்கேறி
வெப்பம் அடர்நதிருக்க
வல்லுறவாய் வந்ததுவோ
ஆலங்கட்டி மழையதுவும்
இனிதான இல்லறத்தில்
இயல்புடனே நடந்தேறும்
புரிதலுடன் கூடிய
கலவி செயல்பாடோ
காலத்தே வந்துதவும்
பருவமழை தானதுவும் .

Thursday, 15 October 2015

நிவேதிதா

வாசமுள்ள  புதுமலர் நீ
ரோசப்பூவின் நிறமும் நீ
பாசமுள்ள மகளும் நீ
மாசேயில்லா பொன்னும் நீ
நித்தம் உதித்திடும் கதிரும் நீ
வேள்வித்தீயின் தூய்மை நீ
தித்தித்திடும் செந்தே்னும் நீ
தாகம் தீர்த்திடும் நன்னீரும் நீ
என்னே தவம் நான் செய்தேனோ
கண்ணே உன்னை பெறுவதற்கே
விண்ணேதான் நான் புகுந்தாலும்
மண்ணே போற்றிட வாழ்த்துவனே!

 

சிரி......... லங்காசாதனையாய் அறிவித்தார்
வேதனை எமக்களித்த காடையரும்
போதனைகள் பெற்றார் - பன்னாட்டு
சேனையையும் துணை கொண்டார்
உலகதனை புறந்தள்ளி - வேறு
சிந்தனைகளேதுமின்றி - நம்
இனந்தனை அழிப்பதற்கே - பல
சோதனைகள் நடத்திட்டார் - மக்கள்
வாழ்வதனை குலைத்திட்டார் - அவர்
அழிவதனை நான் காண தலைவரின்
வரவதனை எதிர்நோக்கி
காலந்தனை கடத்திடுவேன்
நெஞ்சந்தனை அமைதியாக்கி
வஞ்சந்தனை உள்மூடி ....

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்
காலையில ஈன்ற பசு
கன்னுக்குட்டி செத்ததால
கதறியேதான் அழுவுதுங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க!

வாரக்கூலி வாங்கியேதான்
மாமனவன் வந்திடுவான்
பள்ளிகூட பீசயும்தான்
கட்டிகலாம் நாளைக்குன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வாங்கிவந்த கூலியெல்லாம்
போனதது டாஸ்மாகிலன்னு
தெரிஞ்சு அவ அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
கட்டாயம்  கனியு்முன்னு
காத்திருந்த அக்காவுக்கு
வந்த இந்த சம்பந்தமும்
கைநழுவி போனதால
தலையணையில் புதைஞ்சு அவ
தனக்குள்ள அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
அம்சமாதான் விளைஞ்சிருக்கு
அறுத்துக்கலாம் அடுத்தவாரம்
என்றிருந்த உழவனுக்கு
புயல் மழையா வந்து அவன்
உழைப்பு மொத்தம் போனதால
அடிச்சுகிட்டு அழுவுறாங்க
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க
எத்தனையோ அழுகும் குரல்
ஈனமாதான் கேக்குதுங்க பகலினிலே.
நள்ளிரவில் அது பெருசாக கேக்குதுங்க